Tuesday, 29 November 2011

அஃறிணையாய் மாறி...



இரத்தம் வீட்டின்
முற்றங்களைத்
தெளித்திருக்கிறது

வேட்டையின் வாயிலிருந்து
வழிந்தது

வெள்ளைப்புறாவின் இதயம்
உடைந்து ஒழுகியது

கால் பெருவிரல் நகக்கண்வழி
உருவி எடுத்து வீசி
எறிந்தேன் உணர் நரம்புகளை

மண்டை ஓடு சீவி
விரல் நுழைத்து
அகற்றினேன் என் மூளையை

என் முதுகெலும்பு மீதேறி மிதித்து
நான்கு காலாக்கினேன்

அடர்ந்த காடு கடந்து
மரச்சிராய்ப்பினால்
தோலுரித்து நின்றேன்
நிர்வாணமாய்

பரிணாம வளர்ச்சி
தொலைத்துவிட்டு வாழ்கிறேன்

சாதித் தீயில் உடல் கருகும்
நாற்றம் நுகர மறுத்தது.

Thursday, 24 November 2011

விடியலை நோக்கி



இருள்தனை போர்வையாக்கி
இரவு மூடிக் கொண்ட பனி நேரம்
என் துயிலில் பணி நேரம்
யாரோ என் விரல்களை மெல்ல வருட
கிட்டேயழைத்து மார்போடணைத்து
எண்ணத்தில் கூடல் செய்து
இதயத்தில் கருவாக்கி
தாய்மை உணர்வோடு
வெளிக் கொணர்ந்தேனதை அதிகாலையில்!
முந்திய இரவில்..
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டுது
சக்கம்மா தூதுவன் சாமக் கோடாங்கி
உதிர்த்த சொற்களை
என் எண்ணத்தில் ஊற்றி
தலைவாரி புதிதாய் சனித்த மல்லிகை
மொட்டு கட்டி ஊர்க்கண் கண்டிட
கண்திருஷ்டி பொட்டு வைத்து
வீதியில் விட்டு வந்தேன் உன்னை
நான் ‘ஆயுதம்’ பயன்படுத்தவில்லை
உன் ‘காலில்’ வெட்டுக்காயம்
‘மெய்’யில் கத்திக்குத்து
‘உயிர்’ப் போராட்டம்
‘ஒற்றைப் புள்ளி’யில் கண்ணீர்
உதிர்ந்த உன்னைத் தொடுத்து
வலி மறக்க நெஞ்சைத் தடவி
சோர்வில் கண் அயர்ந்தேன்
அது பாம்பாய் நெளிந்து
இதயத்தில் உறைய
கர்ப்ப வலியால் துடிக்கிறேன் நான்
அது கருச்சிதைவு செய்து கொண்டது
வெளி உலகம் அஞ்சியே!
மீண்டும் மறுதலிக்க மறுக்கிறது
பொடிந்து போன அக்கவிதை 
விமர்சனத்திற்குட்பட்டு!